சேலம், நவ.5: சேலத்தில் கடந்த ஒன்றரை வாரத்திற்கு முன்பு பரவலாக மழை பெய்தது. ஒரு வாரமாக ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் இருந்தது. மதியம் 2.30 மணியளவில் வானில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. பின்னர் இடி, மின்னல் இல்லாமல் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இம்மழையால் சேலம் கருவாட்டு பாலம், கிச்சிப்பாளையம் மெயின் ரோடு, கருங்கல்பட்டி, களரம்பட்டி, நாராயணநகர், சித்தேஸ்வரா, காந்தி சிலை, புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லூரி சாலை, பிரபாத் சாலை, தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மழைநீர் ஓடியது. இவ்வழியாக வாகன ஓட்டிகள் யாரும் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மழையால் சேலம் சிசி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பெரிய கடைவீதி, அருணாசல ஆசாரி தெரு, ஓமலூர் மெயின் ரோடு, சாரதா கல்லூரி சாலை, பிருந்தாவன் ரோடு உள்பட பல பகுதிகளில் தீபாவளியையொட்டி அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளில் ஜவுளி விற்பனை பாதித்தது.


