சேலம், நவ.5: சேலத்தில் தீபாவளி பலகார விற்பனை களைகட்டியுள்ளது. அதேநேரத்தில் விற்பனைக்காக தயாரிக்கப்படும் பலகாரங்கள் தரமாக உள்ளதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்திற்கு, இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பலகார தயாரிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில், விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில், தரத்தை பொருட்படுத்தாமல் விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு, பலர் பலகார விற்பனையில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக செயற்கை நிறமூட்டிகளை தவிர்க்க வேண்டும். காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். தண்ணீர் பரிசோதனை, தரமான எண்ணெய் உபயோகம், சுகாதாரமான தயாரிப்பு என்று அனைத்தையும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளியையொட்டி பலகார விற்பனை மற்றும் தயாரிப்பு கடைகளில், திடீர் ஆய்வு நடத்தப்படுகிறது. உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் பணிகளை செய்பவர்கள் கையுறை, தலைக்கவசம் அணிய வேண்டும். பலகாரங்கள் தயாரிக்குமிடம், விற்கும் இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பலகாரங்களை கையால் தொடுவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான, சுகாதாரமான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். இனிப்புகளில் ரசாயன கலவை 200 பிபிஎம் அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பலகாரங்களில் அளவுக்கு அதிகமாக செயற்கை வர்ணம் சேர்க்கக்கூடாது.
இவ்வாறு சேர்த்தால் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும். நெய் மற்றும் பொருள் வாங்கியதற்கான பில் விவரங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பலகாரங்களில் அதிகளவு ரசாயன கலவையை சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வின்போது எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே, சுத்தம், சுகாதாரத்தோடு தரமான பலகாரங்களை தயாரித்து விற்க வேண்டியது தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


