Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஆடிப்பண்டிகை கோலாகலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு; தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்

சேலம், ஆக.5: ஆடிப்பண்டிகையையொட்டி கோட்டை மாரியம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். உருளுதண்டம் போட்டும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சேலத்தில் ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கிய இந்த ஆடிப்பண்டிகையில் தினமும் கோட்டை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தி வருகின்றனர். இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் இன்று (5ம் தேதி) நடக்கிறது. இதற்காக இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் பெண் பக்தர்கள், பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ‘கல் அடுப்புகள்’ தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்து நேற்றே பெண் பக்தர்கள் கோயிலுக்கு வரத்துவங்கிவிட்டனர். நேற்று காலை முதல் நூற்றுக்கணக்கான பெண்கள், கோயில் வளாகத்தில் பெங்கல் வைத்து, கோட்டை பெரிய மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இன்றைய தினம் மிக அதிகப்படியான பெண்கள், பொங்கலிடவுள்ளனர்.

அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் தீச்சட்டி, மாவிளக்கு ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் பிரகாரத்தில் உருளுதண்டம் போட்டும், அலகு குத்தி வந்தும் வழிபாடு நடத்தினர். கோட்டை மாரியம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்குள் வர தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நீண்ட வரிசையில் வந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.