Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விபத்து, ஒலி மாசற்ற தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும்

சேலம், நவ.4: சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடுவது தொடர்பாக, கலெக்டர் இளம்பகவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி திருநாள், மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகை. இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

அதனால் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி பசுமை பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தநேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது, நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கவேண்டும். அதேபோன்று அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி போன்ற வெடிகளை தவிர்க்கவேண்டும்.

குடிசை பகுதி, மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. எனவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் மட்டுமே கூட்டாக வெடித்து, இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.