சேலம், ஆக.10: சேலத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கு 30 சதவீதம் சப்ளை குறைப்பால் தனியார் பாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது 800 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம், தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பருவநிலை மாற்றத்தாலும், தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதாலும், ஆவினுக்கு பால் கொள்முதல் குறைந்துள்ளது.
சேலம் ஆவினில் தினமும் 6.50 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 5.40 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. தினமும் உள்ளுர் தேவைக்கு 2.30 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோக, சேலத்தில் இருந்து 3 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
தற்போது, சேலம் ஆவினில் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், உள்ளூர் பால் முகவர்களுக்கு சப்ளை 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆவினை விட அதிக விலை கொடுத்து, தனியார் கம்பெனி பாலை மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆவினில் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவதால், வரும் காலங்களில் ஆவின் பால் கடைகளுக்கு சப்ளை மேலும் குறைய வாய்ப்புள்ளது.



