சேலம், ஆக. 10: சேலத்தில் ஸ்பா மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் சிறை வைத்தனர். கரூர் மாவட்டம், புலியூர் அன்புநகரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் அரவிந்த் (31). இவர், சேலம் அழகாபுரம் பகுதியில் ஸ்பா மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். அந்த ஸ்பா மசாஜ் சென்டருக்கு, சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த வாலிபர், கடந்த மாதம் 17ம் தேதி மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அங்கு அரவிந்த், ஸ்பாவில் பணியாற்றும் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என விபசாரத்திற்கு அழைத்துள்ளார். இதுபற்றி அழகாபுரம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார், சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அதில் அரவிந்த், ஸ்பாவில் பணியாற்றும் இளம்பெண்களை அவர்களின் வறுமையை பயன்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதனால், அரவிந்த்தை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் மீது, ஏற்கனவே கரூர் டவுன், கோவை சரவணம்பட்டி போலீசில், இதேபோல் விபசார வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், தொடர்ந்து விபசார குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த அரவிந்தை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார், வடக்கு துணை கமிஷனர் அங்கித்சிங் மூலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜோஷி நிர்மல்குமாருக்கு பரிந்துரை செய்தார்.



