சேலம், ஆக.10: சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலத்தில் தேசிய கொடிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தின விழா, வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாவட்ட நிர்வாகம் சார்பில், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துவது வழக்கம். அந்நாளில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுதல், சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிப்பது, வீர,தீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்குவது, சிறந்த சேவை புரிந்தவர்களை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்குவது, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும், மாநகராட்சி, நகராட்சி, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்படும். சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், `சிவகாசி, பெங்களூருவில் தேசியக்கொடிகள் தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து பல மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது பேப்பர், துணி, உல்லன் நூலால் ஆன தேசிய கொடிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேசிய கொடி விற்பனை அதிகரிக்க ெதாடங்கியுள்ளது. பேட்ஜ், தொப்பி, சட்டை பாக்கெட்டில் குத்தப்படும் பேப்பர் தேசியக்கொடி, பலூன், காரில் வைக்கப்படும் தேசியக்கொடி, சில்வர், மெட்டல், கீ செயின், உல்லன் நூலால் தயாரிக்கப்பட்ட கையில் மாட்டப்படும் தேசிய கொடி என பல்வேறு வகைகளில் தேசிய கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு கொடி ஒரு ரூபாயில் இருந்து ரூ.10 வரை விற்பனைக்கு உள்ளது. கம்பங்களில் ஏற்றப்படும் தேசிய கொடிகள், அளவை பொறுத்து ரூ.200 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது,’ என்றனர்.



