திருப்புவனம், ஜூலை 31: திருப்புவனத்தில் பிரமனூர், பழையனூர் உட்பட 21 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வலது பிரதான கால்வாய் மேலரதவீதி திருவரசன் படித்துறை வழியாகச் செல்கிறது. கால்வாயின் அருகே தூய்மைப் பணியாளர்கள் 50 வருடங்களாக வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு குடியிருப்பு பகுதியில் கால்வாயின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனை ஒட்டியிருந்த துப்புரவு பணியாளர்களின் குடியிருந்த வீடுகளும் இடிந்தன. மேலும் பல வீடுகள் பழுதாகி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன என்பதால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 70 பேர் திருப்புவனம் தனியார் திருமண மண்டபத்தில் சில நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்.
அதன்பின்னர் மீண்டும் அதே குடியிருப்பில் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்பு மனைகள் வேண்டும். பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் வருவாய்த்துறை சார்பில் மஞ்சள் குடி பகுதியில் தூய்மை பணியார்களுக்கு வீட்டுமனை வழங்க தாசில்தார் ஆனந்த பூபாலன் தலைமையில் அளவீடு செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து நேற்று மாலை நீர்வளத்துறை அலுவலர்கள் இடிந்த தடுப்புச்சுவரை மராமத்து செய்ய பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். சில வீடுகளை இடித்ததால் தான் மராமத்து பணிகள் செய்ய முடியும் என்ற நிலையில் வீடுகளை இடிக்க முயற்சித்தனர்.
தூய்மை பணியாளர்கள் நீர்வளத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். குடிமனை பட்டா இன்னும் வழங்கவில்லை. பட்டா வந்தாலும் வீடு கட்ட அவகாசம் வேண்டும். வீட்டை இடித்து விட்டால் நாங்கள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படும் என்று முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றதால் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நேற்று திருப்புவனம் தாசில்தார் ஆனந்த பூபாலன் வீட்டு மனைப்பட்டா வழங்கினார்.




