ராமேஸ்வரம், செப். 30: ஒன்றிய அரசின் ஆழ்கடல் மீன்பிடி சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ராமேஸ்வரத்தில் சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே, சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் மகேஸ்வரி மற்றும் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சிவாஜி சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசின் ஆழ்கடல் மீன்பிடி சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மீன் விற்பனையாளர்களை நல வாரியத்தில் இணைத்திட வேண்டும். மீனவர்கள் வலைகள் மற்றும் படகுகள் வாங்க அரசு வங்கிகள் நேரடியாக கடன் உதவி வழங்கிட வேண்டும். மாவட்டம் முழுவதும் விசைப்படகுகளின் கரையோர மீன்பிடிப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுனர். இதில் மாவட்ட துணை தலைவர் சுடலைகாசி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆரோக்கிய நிர்மலா, மாற்றுத்திறனாளி சங்க தலைவர் சீனிவாசன், வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


