ராமேஸ்வரம், ஜூலை 30:தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைக்கக் கூடாது என ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்க கூட்டத்தின் ராமநாதபுரம் மாவட்ட பேரவைக் கூட்டம் தனியார் அரங்கத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ராதா, மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜன், மீனவர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்வேல், மாவட்டப் பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதிய மாவட்ட நிர்வாகிகளில் தலைவராக தங்கராஜ், செயலாளராக செந்தில்வேல், பொருளாளர் சேகர், துணைத் தலைவர்களாக கார்ல்மார்க்ஸ், ஜோதிபாசு,
ஜெயராமன், துணைச் செயலாளர்களாக இன்னாசிமுத்து, பிச்சை, திருநீலகண்டன் மேலும், 15 பேர் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைக்கக் கூடாது. இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வீட்டுமனை நிலம் ஒதுக்கி வீடுகள் கட்டித் தர வேண்டும். மீனவத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடும் கல்வி உதவித்தொகையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.



