திருவாடானை, செப். 29: திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் இருந்து திருவாடானை நோக்கி செல்வதற்காக மங்களக்குடி பகுதியில், ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள டூவீலர் ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக் ஜான் (52) மற்றும் அவரது அருகில் நின்று கொண்டிருந்த அறிவித்தி பகுதியைச் சேர்ந்த குமார் (40) உள்ளிட்ட இருவர் மீதும் மோதி விட்டு கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார், கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கற்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரூபன் (30) என்பதும், இவர் மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் டிரைவரான ரூபனை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


