ராமநாதபுரம், செப். 26: திருஉத்தரகோசமங்கையில் மங்கள நாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் காலங்களை கணக்கிட்டு ஆண்டிற்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். அதாவது இங்குள்ள மரகத நடராஜர் சன்னதி முன்புள்ள உற்சவ மூர்த்தியான சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு 16 வகை அபிஷேக, அலங்கார, தீபராதனைகள் நடக்கிறது. சித்திரை மாத ஓணம், ஆனி மாதத்தில் வரும் உத்திரம், மார்கழியில் வரும் திருவாதிரை ஆகிய மூன்று நட்சத்திரத்திலும் மற்றும் ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வரக்கூடிய சதுர்த்தசி திதியிலும் மகா அபிஷேகம் நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாத சதுர்த்தசி நடராஜர் மகா அபிஷேகத்தை முன்னிட்டு உற்சவ நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் செய்தார்.


