சிவகங்கை, செப். 26: சிவகங்கை கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் முறையான நடவடிக்கைகள் மூலம் நிதியுதவி தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்காக வருவாய் துறையின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய திட்டங்களில் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு செப்டம்பர் 2026 முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவி, அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கி கணக்கு மற்றும் அஞ்சலக கணக்கில் ஆதார் எண் இதுவரை இணைக்கப்படாத பயனாளிகள் தங்களது ஆதார் அட்டையுடன் வங்கி, அஞ்சலகத்தை நேரில் அணுகி ஆதார் இணைப்பை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகள் இந்த உதவி மையங்களை அணுகி தேவையான உதவி மற்றும் வழிகாட்டுதலை பெற்று கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
+
Advertisement


