திருவாடானை, ஜன.26: திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி சிறப்பாக நடைபெற்றுள்ள நிலையில், தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால், பருவமழை கடந்தும் நீடிக்கும் தொடர் மழையினால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருவாடானை வட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 26,500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. தொடக்கத்தில் பருவமழை போதிய அளவில் பெய்ததால், நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து முழு விளைச்சலை தந்துள்ளன. தற்போது வயல்களில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளன.
வழக்கமாக தை மாதத் தொடக்கத்தில் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை காலத்தைக் கடந்தும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், வயல்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நிலங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால், வழக்கமாக பயன்படுத்தப்படும் சாதாரண ‘டயர்’ பொருத்தப்பட்ட அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் விவசாயிகள் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். வேறு வழியின்றி, சேற்றில் இயங்கக்கூடிய ‘செயின்’ பொருத்தப்பட்ட அறுவடை இயந்திரங்களை விவசாயிகள் நாடி வருகின்றனர். ஆனால், இந்த இயந்திரங்களுக்குச் சாதாரண இயந்திரங்களை விட இருமடங்கு வாடகை வசூலிக்கப்படுகிறது.
சாதாரண இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.1,500 முதல் 1,800 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. செயின் இயந்திரம் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, ஒரு மணி நேரத்திற்கு ரூ.3,000 முதல் 3,200 வரை வாடகை கேட்கப்படுகிறது. அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்:\”இந்த வருஷம் மழை நல்லா பெய்ததால் விளைச்சல் நல்லா இருக்கு. ஆனா, அறுவடை நேரத்துல விடாம பெய்த மழையால வயல்ல தண்ணி வடியல. டயர் மிஷின் உள்ளே போக மாட்டேங்குது.
செயின் மிஷின் கொண்டு வந்தா, ஒரு மணி நேரத்துக்கு 3000 ரூபாய்க்கு மேல வாடகை கேட்குறாங்க. ஒரு ஏக்கருக்கு அறுவடை கூலியே பெருந்தொகையா போயிடுது. இதுபோக ஆள் கூலி, உரம், மருந்துன்னு பார்த்தா விவசாயிகளுக்கு கையில எதுவும் மிஞ்சுற மாதிரி தெரியல. அரசு தலையிட்டு அறுவடை இயந்திரங்களுக்கு முறையான வாடகையை நிர்ணயம் செய்யணும்,\” என வேதனையுடன் தெரிவித்தனர். தற்போது கூடுதல் வாடகை கொடுத்தாவது விளைந்த நெல்லைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சகித்துக் கொண்டு அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


