ராமேஸ்வரம், செப்.25: சம்பை கிராமத்தில் ராமாயண வரலாற்றில் தொடர்புடைய கிருஷ்ண தீர்த்தத்தில் மகா தீர்த்த பூஜை நடைபெற்றது. ராமேஸ்வரம் சம்பை கிராமத்தில் ராமாயண வரலாற்றில் தொடர்புடைய கிருஷ்ண தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்ததில் பூஜை செய்து வழிபட்டால் உறவினர்களிடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கி, பிரச்சனை தீர்ந்து, பிரிந்த குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேர்ந்து சுபிட்சமாக வாழ்வர். உறவுகளில் அமைதியும், பரஸ்பர அன்பும், ஒற்றுமையும் உண்டாகும் என்பது ஐதீகம். இத்தீர்த்ததில் பசுமை ராமேஸ்வர தீர்த்த மித்ரா குழுவினர், விவேகானந்தா கேந்திரம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து தூய்மைப் பணி செய்தனர். தொடர்ந்து உலக நன்மை வேண்டி மகா தீர்த்த பூஜை நடைபெற்றது.
உலக அமைதிக்காகவும், குடும்பங்களில் உறவுகள் மேம்படவும் தீர்த்தத்தில் சிவாச்சாரியர்கள் கலச பூஜை நடத்தி, பல்வேறு திரவிய அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜைக்கு பின் மஹா தீர்த்த ஆராத்தி நடைபெற்றது. பக்தர்கள் மலர்தூவி தீர்த்தத்தை போற்றி வணங்கினர். இதில் உள்ளூர் பொதுமக்கள், தீர்த்த மித்ரா குழுவினர், ஆன்மீக பெருமக்கள், தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இறுதியாக பொது மக்களுக்கு தீர்த்தத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


