ராமநாதபுரம், ஜூலை 23: ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஆதம்ந கர் கண்ணகி தெரு 1வது மற்றும் 2வது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இத்தெருவிற்கு செல்லும் பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நடந்து கூட செல்ல முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய தார்ச்சாலை அமைக்க கடந்த கடந்த 2025-2026 நிதி ஆண்டில் ரூ.10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தேர்தல் முடிந்த பிறகு தற்போது சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதில் கண்ணகி தெரு 1வது தெருவில் முழுமையாகவும் 2வது தெருவில் பாதி சாலை அமைத்தும் சுமார் 50 மீ தூரத்திற்கு சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லி கற்கள் பரப்பியும், சில இடத்தில் தார் மட்டும் ஊற்றிய நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கிடப்பதால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை இருப்பதாக புகார் கூறுகின்றனர்.
அப்பகுதியினர் கூறும்போது, ‘‘சக்கரக்கோட்டை ஊராட்சி, கண்ணகிநகர் 1வது மற்றும் 2வது தெருவில் சாலை அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த ஆட்சியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது 1வது தெருவில் முழுமையாக சாலை அமைக்கப்பட்ட நிலையில் 2வது தெருவில் சாலை முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது. கேட்டால் ஒதுக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை முடித்துவிட்டோம் என்கின்றனர். இதனால் 50 மீட்டர் தூரத்திற்கு கூர்மையான ஜல்லி கற்கள், வெறும் தார் ஊற்றி பரப்பிய நிலையில் சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் காலில் காலணி போட்டும் நடந்து கூட செல்ல முடியவில்லை பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியோர், பெண்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை முழுமையாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘‘சாலை அமைத்த தொழிலாளர்கள் வெளியூர் சென்று விட்டனர். அவா்கள் வரவழைக்கப்பட்டு கிடப்பில் உள்ள சாலை போடும் பணி துவங்கப்பட உள்ளது. விரைவில் சாலை முழுமையாக அமைக்கப்படும்’’ என்றார்.



