பரமக்குடி: பரமக்குடி அருகே வேந்தோணி திருநங்கை நகரில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அங்கு அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் அம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் திருநங்கைகளே முன்னின்று நடத்துவது சிறப்பம்சமாகும். இந்தாண்டு திருவிழா கடந்த ஜூலை 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், வழிபாடுகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு திருநங்கைகள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆடி அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் சிலைகள், முளைப்பாரி, அக்னிச் சட்டி, அழகு குத்தி உள்ளிட்டவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள ஊரணியில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து திருநங்கை ஓவியா கூறுகையில், ‘பரமக்குடியில் தொடர்ந்து 8வது ஆண்டாக முத்துமாரி யம்மன் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி உற்சவத்தை நடத்தி வருகிறோம். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த விழாவை நடத்துகிறோம். திருநங்கைகளாக மாறிய பிறகு குடும்பம் மற்றும் சமுதாயத்தில் பல்வேறு புறக்கணிப்புகளை சந்தித்தோம். இருப்பினும், அவற்றை பொருட்படுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திருவிழாவை நடத்துகிறோம்’ என்றார்.




