Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொன்மையான பொருட்களை பாதுகாக்க புதிய அருங்காட்சியகம் அமைக்க மக்கள் கோரிக்கை

ராமநாதபுரம், ஜூலை 23: ராமநாதபுரம் மாவட்டம், புராணங்கள், புரதானங்கள், சங்ககாலம் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய மாவட்டம் என்பதால் பல தொல் பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள் முதல் கடைசியாக வந்த ஆங்கிலேயர்கள் வரை ஆட்சி செய்த மாவட்டம், ராமாயணம் உள்ளிட்ட புராணங்களின் படி தடயங்கள், பதிகங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள், அகநானூறு, புறநானூறு, நற்றினை போன்ற பண்டைய கால இலக்கிய நூல்கள், நடுகல் மரபு, முதுமக்கள் தாழி,போர் புரிதல், பழமையான கடல் வணிகம் செய்தல் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் மிகப் பழமையான வரலாற்று சான்றுகள் உள்ள மாவட்டமாக உள்ளது.

இங்கு தொன்மையான அரிய பொருட்கள் இருப்பதாலும், அவ்வப்போது பல இடங்களில் பல தொன்மையான பொருட்கள் கிடைத்து வருவதாலும் கடந்த 2008ம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. தனி அரசு கட்டிடம் வசதி இல்லாததால் தேவிப்பட்டிணம் சாலையில் உள்ள கேணிக்கரை நான்கு முனை சந்திப்பு சாலையோரம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் (ஜவான் பவான்) நல கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 65 கற்சிலைகள், தொன்மையான மரச்சிற்பங்கள், பழங்கால ஓலைச்சுவடிகள், பழங்கால நுால்கள், பழங்கால நாணயங்கள் என தொன்மையான பொருட்கள் பல உள்ளன.

இந்நிலையில் 1990ல் கட்டப்பட்ட முன்னாள் ராணுவவீரர்கள் நல கட்டிடம் கட்டப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்டதால் கட்டிடம் வலுவிழந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. மேற்கூரைகள் பெயர்ந்து விழுதல், கட்டிடத்தில் விரிசலுடன் காணப்படுவதால் பாதுகாப்பு நலன் கருதி கடந்த 10 மாதங்களாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கடந்த திமுக ஆட்சியில் மண்டபம் பகுதியில் 5 ஏக்கரில் புதிய அரசு அருங்காட்சியகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே புதிய அருங்காட்சியம் அமைக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும். அதுவரை பாதுகாப்பான இடத்தில் அருங்காட்சியகம் தொடர்ந்து செயல்படவும், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தற்காலிக அரசு கட்டிடம் ஒன்றை ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.