அதிகாரிகளின் அலட்சியத்தால் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவியும் மக்கள்: கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பு
ராமநாதபுரம், ஆக.21: உள்ளாட்சி நிர்வாகங்கள், தாலுகா அளவிலான அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். இதனால் ராமநாதபுரம் கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாரந்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து மனு அளிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய 9 தாலுகா பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்து தகுதியான மனுக்களாக இருப்பின் அதற்கு குறிப்பிட்ட நாட்களில் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வு பெற்று வந்தனர்.
இதில் குறிப்பாக உதவிதொகைகள், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நிலம் சம்பந்தமான கோரிக்கைகள், வேலை வாய்ப்பு, அரசு நலத்திட்ட உதவிகள், மாநில, ஒன்றிய அரசின் உதவி நாடுவோர் உள்ளிட்ட தனிநபர் கோரிக்கைகள். குடிநீர், சாலை, போக்குவரத்து, மருத்துவம், மின்சாரம், கல்வி, ரேசன், மயானம், விவசாயி, மீனவர் நலன் கோரிக்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், கட்டிடங்கள் உள்ளிட்ட பொது கோரிக்கைகள் குறித்து தனிநபர்கள், கிராமமக்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் என வந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
யூனியன், நகராட்சி, பேரூராட்சி, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அந்தந்த பகுதிகளில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மாவட்டத்தின் தலைமையிடத்தில் உள்ள முக்கிய துறைகளின் உதவி இயக்குனர்கள், துறை வாரியான கலெக்டரின் நேர்முக உதவியாளர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தால் அந்த அதிகாரிகள் மனுக்களை பெற்றாலும் முறையான பதில் கூறுவதில்லை.
சில மனுக்கள் மீது காலம் தாழ்த்துவது, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் இல்லை. உரிய பதிலும் அளிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் வெறுப்படையும் மக்கள் ராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில் நடக்கக்கூடிய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகபட்சம் 100 கி.மீ தூரத்திற்கும் அப்பாலிருந்து இரண்டிற்கும் மேற்பட்ட பஸ்கள் அல்லது வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் பிடித்து பணம் செலவு செய்து, அலைச்சலுடன் ராமநாதபுரம் வருகின்றனர். கலெக்டரிடம் மனு கொடுத்தால் தான் உரிய நடவடிக்கை இருக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். மாவட்டத்தின் கலெக்டராக சிவகுரு பிரபாகரன் ஜூன் 4ம் தேதி பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில் இவர் கலந்து கொண்டது முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து கூட்டத்திலும் அனைத்து துறையின் மாவட்ட தலைமை அதிகாரிகள் முதல் தாலுகா, ஒன்றிய அளவிலான என அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் தீர்வு அல்லது உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர். இதனால் வாரந்தோறும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 600 முதல் 700 வரை பொதுமக்கள் வந்து நீண்ட வரிசையில் வந்து கலெக்டரிடம் மனுக்களை அளித்து வருகின்றனர். கலெக்டரிடம் மனு அளிப்பதற்கு முன்பாக பொதுமக்கள் தங்களது மனுவை வரவேற்பு பகுதியில் பதிவு செய்து, அதற்கான ஒப்புதல் ரசீது பெற்று வருகின்றனர்.
காலை 8.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பொதுமக்கள் வந்து மனுவை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட நேரங்களில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் சொற்ப எண்ணிக்கையில் போலீசார் இருப்பதால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். மனு ரசீது வழங்குவதற்காக மனுதாரர் பெயரை கூறி அலுவலர்கள் அழைக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் போதிய நிழல் வசதி இல்லாததால், தற்காலிக நிழற்குடை உள்ள ஒரு பகுதியில் நுாற்றுக்கணக்கானோர் ஒன்றாக கூடுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, தகராறும் ஏற்பட்டு வருகிறது. அந்தந்த பகுதியில் இருக்கக் கூடிய தாசில்தார், பிடிஓ, நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பிற அனைத்து துறை அதிகாரிகள், மாவட்ட அளவிலான துறைகளின் தலைமை அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து உரிய நடவடிக்கை அல்லது உரிய பதில் அளித்திருந்திருந்தால் வாரந்தோறும் நுாற்றுக்கணக்கானோர், மாவட்ட தலைநகருக்கு இரண்டு, மூன்றிற்கும் மேற்பட்ட பஸ்கள் மாறி, பணம் செலவழித்து, அலைந்து வந்து கலெக்டரிடம் மனு அளிக்க வர மாட்டார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளின் மெத்தனமே காரணம். எனவே அந்தந்த பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.



