திருவாடானை, ஜூலை 21: பிடிவாரண்ட் உள்ளவர்கள் உடனடியாக ஆஜராகாவிட்டால் கூடுதல் வழக்கு பதியப்படும் என திருவாடானை டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாடானை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட வாரண்டுகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அத்தகைய நபர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்யக் காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து திருவாடானை துணைக்கண்காணிப்பாளர் சீனிவாசன் விடுத்துள்ள எச்சரிக்கையில், நீதிமன்ற உத்தரவின்படி பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நபர்கள் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகத் தங்களுக்குரிய நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகி சட்ட நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது தனியாக மற்றுமொரு புதிய குற்றவழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், சம்மந்தப்பட்ட நபர்கள் கூடுதல் சட்டச் சிக்கல்களையும் கடுமையான வழக்குகளையும் சந்திப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.



