ஆர்.எஸ்.மங்கலம், ஆக.20: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து விதியை மீறி பொது மக்களுக்கு அச்சத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்து விதமாக சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தொண்டி உள்ளிட்ட பகுதிகள் மிகவும் முக்கியமான ஊராகும். இந்த ஊரை சுற்றி ஏராளமான கிராமப் பகுதிகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் விவசாயம் மற்றும் விறகு வெட்டுதல், கரிமூட்டம் போடுதல், மீன்பிடி தொழில் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் வெட்டப்படும் விறகுகள் தாராபுரம், திருப்பூர், ஈரோடு,கரூர் உள்ளிட்ட பிற பகுகளுக்கு லாரி உள்ளிட்ட வாகனங்கன் மூலம் ஏற்றிச் செல்கின்றனர். இதேபோல் கரிமூட்டைகளும் ஏற்றிச் செல்லப்படுகிறது. அதேபோல் இப்பகுதியில் விளையக்கூடிய மிளகாய் வத்தல் திருச்சி, மதுரை, சிவகாசி, விருதுநகர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு ஏற்றிச் செல்லும் விறகு, கரிமூட்டை, மிளகாய், நெல் மற்றும் வைக்கோல் உள்ளிட்ட பொருட்களையும் டிப்பர், லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது.
இதேபோல் பல பகுதியில் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் அளவுக்கு அதிகமான உயரத்தில், அதிகப்படியான பாரம் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் தாழ்வான நிலையில் உள்ள மின் கம்பிகளில் உரசி வயர்கள் அறுந்து விடுகின்றது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரும் பாதசாரிகளும் மிகுந்த அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் டூவீலர்களை 18 வயதை எட்டாத பள்ளி சிறார்களும் ஓட்டிச் செல்கின்றனர். அதிலும் ஒரே டூவீலரில் இரண்டிற்கும் மேற்பட்டோர் பயனிக்கின்றனர்.
தலைகவசம் அணிவதில்லை இவ்வாறு வாகனங்களை ஒட்டிக் செல்லும் சிறுவர்களால் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகிறது. அப்படி ஓட்டிச் சென்று ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் சட்டப்படி எந்த காப்பீட்டு சலுகைகளுமே பெற இயலாத நிலை ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி, தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டிணம், வெள்ளையாபுரம், மங்கலக்குடி, திருவாடானை உள்ளிட்ட பகுதியில் ஏராளமான சிறுவர்கள், டூவீலர்களை ரேஸில் செல்வது போலும் அதிகமான ஹாரன் சத்தத்தை எழுப்பி கொண்டு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது போன்று விதிமீறி செல்லக் கூடிய வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் வாகன விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் வாகன ஒட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு சிறுவர்கள் ஓட்டி வந்த டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், சிறுவர்களுக்கு வாகனத்தை ஓட்டக்கொடுத்த பெற்றோர்கள் மீதும் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் போடப்பட்டுள்ளது. இச்செயல் பாராட்டத்தக்கது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



