Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் ஆறு மீட்க பொதுமக்கள் வேண்டுகோள்

பரமக்குடி, ஆக.19: பரமக்குடி வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் சுருங்கி வரும் வைகை ஆற்றை மீட்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி வைகை ஆறு சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவையை போக்கும் ஜீவ நதியாக உள்ளது. தற்போது ஆற்றில் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பரமக்குடி வைகை நகர் பகுதி ஆற்றில் ஓட்டல்களுக்கு வியாபாரம் செய்வதற்காக கரிக்கொட்டைகளை தயார் செய்து வருகின்றனர். இதுபோக ஆடு, மாடுகளையும் கட்டி வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் ஆற்று மணலை கடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டுகளில் கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள வைகை ஆற்றின் கரையின் உள்புறத்தில் தனியார் ஆக்கிரமித்து கொண்டு, தங்களுக்கு சொந்த இடம் எனக்கூறி வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்தபோது, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதிகாரிகளின் துணையோடு விற்பனை செய்து விட்டனர். இதேபோல் காட்டுபரமக்குடி அரசு மருத்துவமனை எதிரே வைகையாற்றின் கரையோரத்திலிருந்து காட்டுபரமக்குடி மேல்நிலை நீர்தேக்க தொட்டிவரை கரையோரத்தில் உள்ள வைகையாற்றில் தடுப்புச்சுவர் கட்டி வீட்டுமனைகள் உருவாக்கி விற்பனை செய்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வைகை ஆற்றின் இரு கரையோரங்களில் சர்வீஸ் சாலை அமைத்த பின்பும் அடுக்கடுக்கான ஆக்கிரமிப்புகளால் வைகை ஆறு சுருங்கி வருகிறது. மேலும் நகராட்சி சார்பாக சேகரிக்கப்படும் குப்பைகள், கட்டுமான கழிவுகள் உள்ளிட்டவை வைகை ஆற்றுப்பகுதியில் கொட்டப்படுவதால் தனி நபர்கள் குடிசைகள் மற்றும் வேலிகள் அமைத்து படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றனர். இதனை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.