தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு; கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் துவக்க வேண்டும்: நம்புதாளை மக்கள் வலியுறுத்தல்
தொண்டி, ஜூலை 18: தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சிக்கு போதிய குடிநீர் வழங்கப்படாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அமல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நம்புதாளை அதிக மக்கள் தொகை உள்ள பெரிய ஊராட்சியாகும். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தினைக்காத்தான் வயல் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வழங்கப்படும் குடிநீர் போதிய அளவு கிடைக்காததால் பல நெடுங்காலம் இங்கு தண்ணீர் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த காலங்களில் மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட அதே அளவு தண்ணீர் இப்போதும் வழங்கப்படுகிறது.
இது எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரே வழங்கப்படுகிறது. இதை தெரு வரியாக மேற்கு தெரு, கிழக்கு தெரு, மறவர் தெரு, படையாச்சி தெரு, பல்லக்கு ஒலியுல்லா தெரு, கண்மாய் கரை குடியிருப்பு என பிரித்து வழங்கும் போது, நீண்ட நாட்களுக்கு ஒரு முறையே ஒரு வழங்க முடிகிறது. இதுவும் பெரும் பிரச்னையாக உள்ளது. வழங்கப்படும் தண்ணீரை போதிய அளவு வழங்கினாலே ஓரளவு சமாளித்து விடலாம்.வழங்கும் தண்ணீரே பற்றாக்குறையாக இருக்கும் போது குறைந்த அளவே வழங்க முடிகிறது. இதை தீர்க்க நம்புதாளையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு துவங்கப்பட்டால் குறிப்பிட்ட ஏரியாவிற்கு இதன் மூலம் தண்ணீர் வழங்கலாம்.
மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தண்ணீர் கிடைக்க கடந்த காலங்களில் அதிகாரிகள் எவ்விதத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை. நம்புதாளைக்கென தனியாக போர்வெல் போட்டு தருவது அல்லது கூடுதல் தண்ணீர் வழங்குவது என எதிலும் கடந்த 10 வருடத்தில் எவ்வித முயற்ச்சியும் எடுக்கவில்லை. குடிதண்ணீரை மக்கள் விலை கொடுத்தே வாங்க வேண்டிய சூழலில் உள்ளனர். இதை மாற்ற இனி வரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பதினெட்டாம்படியான் கூறியது, நம்புதாளையில் தண்ணீர் பிரச்னை என்பது பல நெடுங்காலமாக உள்ளது. தினைக்காத்தான் வயல் குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இது போதுமானதாக இல்லை. மீண்டும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் தண்ணீர் வழங்கப்பட்டது.
இது போதுமானதாக இல்லை. தண்ணீரை அதிகளவு தாருங்கள் அல்லது நம்புதாளைக்கென தனி சம்பு அமைத்து அதன் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி, ஊராட்சி சார்பில் பல முறை மனு கொடுத்துள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு இந்த ஊராட்சியில் தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது என்றார். செய்யது நெய்னா கூறியது, நம்புதாளையில் அரை நூற்றாண்டுகளாக தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியாததாக உள்ளது. கடந்த காலங்களில் இதனால் ஊரை காலி செய்து வெளியூர் சென்றவர்கள் அதிகம் விலை கொடுத்து தான் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. நம்புதாளை அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சி என்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.



