ராமேஸ்வரம், ஆக.17: ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித்திருவிழா பனிரெண்டாம் திருநாளை முன்னிட்டு நேற்று சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு மேல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் கோயில் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கோயில் குருக்கள் சரவணன், அம்பாள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தார். பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது. அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தங்க தாலியுடன் சீர்வரிசை தலைவர் கன்.இளங்கோ தலைமையில் வழங்கப்பட்டது.



