ராமநாதபுரம், ஆக.17: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை, சிகிச்சையில் அலட்சிய போக்கு நிலவி வருவதால் உயிரிழப்பு அபாயம் இருப்பதாக கூறி ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், மகப்பேறு கால பரிசோதனை, பிரசவம், விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு, முடநீக்கியல் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, மனநலம், காசநோய், தொழுநோய், எச்.ஐ.வி, குழந்தைகள் நலன், எலும்பு முறிவு, சித்தா, ஹோமியோபதி, யுனானி, கண், பல், மனநலம் உள்ளிட்ட பல மருத்துவபிரிவுகள், டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளிமாவட்டம், மாநிலத்தவர் என நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 100 முதல் 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்களே அதிகமாக வருகின்றனர்.



