ராமநாதபுரம், ஜூலை 16: ராமநாதபுரம் அருகே வெள்ளரி, எள் விவசாய நிலங்களை மாடுகள் மேய்ந்து சேதப்படுத்தி வருவதால் கட்டுப்படுத்த கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாறியலில் ஈடுபட்டதால் இசிஆர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் அருகே ஆர்எஸ்.மடை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சக்கரகோட்டை கண்மாய் பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கர் பாட்டா விவசாய நிலத்தில், கோடை விவசாயமாக வெள்ளரி, எள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் அருகே உள்ள கூரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் கால்நடைகள், இரவு நேரத்தில் வந்து மேய்வதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்ப்குதி பெண்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோடைகாலத்தில் வெள்ளரி விவசாயம் செய்து அதனை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இதனைப் போன்று எள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அருகே உள்ள கூரியூர் கிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளை கட்டி போடாததால் இரவு நேரத்தில் விவசாய நிலத்தை வந்து மேய்ந்து அழிக்கின்றன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.இது குறித்து மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் ராமநாதபுரம் பி1 காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாடுகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த மறியலால் தூத்துக்குடி, ராமேஸ்வரம், வேளாங்கண்ணி பிரதான கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



