திருப்புவனத்தில் இடிந்து விழுந்த நீர்வரத்து கால்வாய் கட்ட ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கீடு: கட்டுமான பணிகள் துவக்கம்
திருப்புவனம், ஆக.14: திருப்புவனத்தில் இடிந்து விழுந்த பிரமனூர் கண்மாய் நீர்வரத்து கால்வாய் கட்ட ரூ2.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே தட்டான்குளம் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து வலது பிரதான கால்வாய் மூலம் செல்லும் தண்ணீர் பிரமனூர் உள்ளிட்ட 16 கண்மாய்களை நிரப்புகிறது. இக்கால்வாய் 7 கி.மீ தூரம் செல்கிறது. மேலும் ஆற்றுப் பகுதியில் இருபுறமும் தடுப்புச் சுவருடன் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்வாய் முறையாக பராமரிக்காததால் கடந்தாண்டு டிசம்பரில் தண்ணீர் திறந்தபோது திருப்புவனம் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு அருகே உடைப்பு ஏற்பட்டது.
இதில் துப்புரவு பணியாளர்கள் வீடுகள் சேதமடைந்தன. அப்போது உடனடி தேவைக்காக தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு கால்வாய் உடைப்பு அடைக்கப்பட்டது. தற்போது இடிந்த தடுப்புச்சுவரை அகற்றிவிட்டு புதிதாக தடுப்புச்சுவர் கட்ட நீர்வளத்துறை ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 57 மீட்டர் பாலத்திலிருந்து வைகை ஆற்றின் ஓரம் கட்டப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இடிந்த சுவருக்கு அருகில் சேதமான சுவரை இடித்து அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.



