Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விபத்து ஏற்படும் அபாயம்; சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சி, வழுதூர் அருளொளி நகர் பகுதியில் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் இருந்த பிரசித்தி பெற்ற அருளொளி விநாயகர் ஆலயம் மற்றும் பல்வேறு வியாபார கடைகள் இடிக்கப்பட்டது. தற்போது நான்கு வழி சாலை விரிவாக்கம் செய்வதற்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பைப் அமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது.

அதில் பைப் லைன் முறையாக மூடப்படாததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கனரக வாகனங்கள் மற்றும் சிறு வாகனங்கள் வரும் பொழுது ஜல்லி கற்கள் பெயர்ந்து விபத்து ஏற்படுகிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் இந்த இடத்தில் தடுமாறி கீழே விழுந்து காயத்துடன் செல்லும் அவலமான சூழ்நிலை உள்ளது. மேலும் தேசிய ஆன்மீக சுற்றுலா தலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்திற்கு இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இதனை போன்று தங்கச்சிமடம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்காக நாள்தோறும் டன் கணக்கில் பாறைகளை ஏற்றி லாரிகள் வந்து செல்கிறது.

இந்த வழுதூர் பகுதியில் சாலை மோசமாக இருப்பதால் அதிவேகமாக வரக்கூடிய வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது. பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன்பு இதனை சரி செய்ய வேண்டும், இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழுதூர் பகுதியைச் சார்ந்த கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.