கீழக்கரை, ஆக. 13: கீழக்கரை தாலுகா பனைக்குளம் ஊராட்சி நல்லங்குடி கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இம்முகாமில் நல்லாங்குடி கிராமத்தில் மழைக்காலம் வருவதற்கு முன் ஊருணியை தூர்வாருதல், சாலை வசதிகளை சீர்செய்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.அதனைத்தொடர்ந்து அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்த சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். அரசின் பல்வேறு துறைகள் மூலம் 69 பயனாளிகளுக்கு ரூ.8,89,838 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஹபிபூர் ரஹ்மான், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கீழக்கரை வட்டாட்சியர் ராமசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



