Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கிராம கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம், ஆக.13: ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்தும் பொதுமக்கள் வழிபட்டனர். இதனையொட்டி கிராம கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டிணம் நவபாஷன தீர்த்தம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி மாரியூர் ஆகிய தீர்த்தக் கடலில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளை செய்து வழிபாடு செய்தனர். இதற்காக உள்மாவட்டத்தின் அனைத்து பகுதிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று அதிகாலையில் கடல்களில் புனித தீர்த்தமாடினர்.

தேவிப்பட்டிணம் கடற்கரையில் உள்ள நவபாஷன தீர்த்தம், ராமர் தீர்த்தம் ஆகியவற்றில் மூழ்கி தீர்த்தமாடி அங்குள்ள கடலடைத்த பெருமாள் கோயிலில் வழிபாடு செய்தனர். அதேபோன்று, திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் நீராடி, கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபட்டனர். பின்னர் சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீரஆஞ்சனேயர், திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதிஜெகநாத பெருமாள் கோயில் மற்றும் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதசுவாமி மற்றும் வராஹி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். அதேபோன்று சாயல்குடி பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தும், முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். புனித கடற்கரைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்கள் அதிகளவில் வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிராம புற கோயில்களில் அமாவாசை விஷேச பூஜைகள், வழிபாடு நடந்தது. ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசலாட்சி உடனுரை காசிவிஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், அபிராமம் அருகே உள்ள அ.தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுரை தரணீஸ்வரர், சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுரை கைலாசநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுரை செஞ்சிடைநாதர், மேலக்கடலாடி அருகே உள்ள நித்திய கல்யாணி உடனுரை வில்வநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் சோமேஸ்வரர் ஆகிய கோயில்களில் விஷேச பூஜைகள் நடந்தது.

ராமநாதபுரம் மாரியம்மன்கோயில் தெருவிலுள்ள ராஜமாரியம்மனுக்கு 21 அபிஷேகங்கள் செய்யப்பட்டு 108 கிலோ மல்லிகை பூ அபிஷேகம் நடந்தது. ரயில்வே சாலையிலுள்ள வெட்காளியம்மன், கலெக்டர் அலுவலக பகுதியிலுள்ள பிள்ளை காளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் அரியநாயகி அம்மன், ஏனாதி பூங்குளம் அய்யனார், சுடலைமாடன், சேதுமகாளியம்மன், சமத்துவபுரம் அருகே உள்ள வனப்பேச்சிஅம்மன், ராக்காச்சி அம்மன், கடலாடியிலுள்ள ராஜராஜேஸ்வரி அம்மன், பாதாள காளியம்மன் பத்திரகாளியம்மன், காமாட்சியம்மன், சந்தன மாரியம்மன், முத்தாலம்மன், சொர்ணகாளியம்மன், காணீக்கூர் பாதாள காளியம்மன், புனவாசல் பொன்னந்தி காளியம்மன், உய்வந்தம்மன் ஆகிய கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. இதனை போன்று முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லியம்மன், பேரையூர் அருகே கருங்குளம் முத்துமாரியம்மன் ஆகிய கிராம புற கோயில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.