திருப்புத்தூர், டிச.10: திருப்புத்தூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் கடந்த டிச.1ம் தேதி முதல் அனைத்து விதமான வழக்குகளிலும் இ.பைலிங் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் வழக்கறிஞர்களுக்கு பலவிதமான சிரமங்கள் இருப்பதாகவும், இ.பைலிங் முறையாக செயல்படாமலும், செயல்படுத்த முடியாமலும் உள்ளது என்றும் வழக்கறிஞர்கள் கூறி நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருந்து வருகின்றனர்.
மேலும் வழக்கறிஞர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆர்ப்பாட்டமும், உண்ணாவிரத போராட்டங்களும் செய்து வருகின்றனர். திருப்புத்தூர் நீதிமன்றம் முன்பு நேற்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் இ.பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, செந்தில்குமார், சஞ்சீவிக்குமரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.


