Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடல் வளத்தை மேம்படுத்த ஆமைகளை பாதுகாக்க மீனவர்கள் கோரிக்கை

தொண்டி, செப்.8: கடல் வளத்தை பாதுகாக்க பெரிதும் துணை நிற்கும் கடல் ஆமைகள் பல்வேறு காரணங்களால் இறக்கிறது. இவற்றை பாதுகாக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மீன் வளத்துறை மற்றும் கடலோர காவல் படை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆரம்ப காலங்களில் கடல் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. நிலப்பரப்பை கண்டு பிடிக்க சிரமம் அடைந்தனர். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டை கண்டுபிடிக்க இந்த கடல் ஆமைகள் பெரிதும் உதவி புரிந்துள்ளது. கடல் ஆமைகள் கடற்கரை ஒரங்களில் முட்டையிடும். அவ்வாறு முட்டையிட செல்லும் போது அந்த கடல் ஆமைகளை பின்தொடர்ந்து நிலப்பரப்பை கண்டு பிடிப்பது, அப்பகுதியில் துறைமுகம் அமைப்பது என தொடர்ந்துள்ளனர்.

அதிகமான ஆமைகள் தமிழக கடற்கரை பகுதிக்கே முட்டையிட வருவது குறிப்பிட தக்கது. ஒவ்வொரு ஆமையும் 60 முதல் 100 முட்டைகள் இடும். கடற்கரை மணலில் முட்டையிட்டு மூடி வைத்துவிட்டு தாய் ஆமைகள் மீண்டும் கடலுக்குள் சென்று விடும். சுமார் 45 முதல் 65 நாள்களில் ஆமை குஞ்சுகள் வெளியே வந்து சில வினாடிகளில் கடலுக்குள் சென்று விடும். இதே ஆமைகள் பெரிதாகி மீண்டும் அதே இடத்திற்கு முட்டையிட வரும். இது பிறந்த தாய் வீட்டிற்கு பெண் பிள்ளைகள் பிரசவத்திற்கு வருவது போல் என்கின்றனர். பெரும்பாலும் கடல் ஆமைகள் கடல் நீரோட்டத்தை பயன்படுத்தி செல்கிறது. இவ்வகை ஆமைகள் ஜெல்லி மீன், ஸ்டார் (நட்சத்திரம்) மீன் போன்றவற்றையே உணவாக உட்கொள்ளும். இந்த உணவு முறையே கடல் வளத்தை மேம்படுத்த உதவுவதாக கூறுகின்றனர்.

ஜெல்லி மற்றும் ஸ்டார் மீன்கள் கடலில் உள்ள மீன்களை உணவாக உட்கொள்ளும். இது ஒரு நாளைக்கு வலைகள் மூலம் பிடிக்கப்படும் அளவை விட பன்மடங்கு அதிகமாம். அவ்வாறு மீன் குஞ்சுகள் முதல் அளிக்கப்படும் போது கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்படும். அதனால் கடல் ஆமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திமிங்கலம், டால்பின் போல் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. இவை 5 முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை கடலின் மேல் மட்டத்திற்கு வந்து சுவாசித்துச் செல்லும். வலைகளில் சிக்கும் போது மேலே வந்து சுவாசிக்க முடியாமல் இறந்து விடுகிறது. கடல் வளத்தை மேம்படுத்தும் கடல் ஆமைகளை பாதுகாக்க தமிழக அரசு மீன்வளத் துறை மற்றும் மரைன் போலீசார் மீனவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் தொண்டி, புதுக்குடி, நம்புதாளை, சோலியக்குடி, லாஞ்சியடி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் வலையில் சிக்கி உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது. இச்செயலை ஊக்குவிக்கும் விதமாக அரசு பாராட்டு சான்றிதழ், பரிசுத் தொகை வழங்குகின்றனர். நம்புதாளை மீனவர் நாகேந்திரன் கூறியது, ‘‘ஆமைகள் கடல் வளத்தை மட்டுமின்றி மீனவர் வாழ்விலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வலையில் சிக்கிய ஆமைகளை மீட்கும் போது வலைகள் முற்றிலும் சேதமடைந்து நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தாலும் ஆமைகளை உயிருடன் மீண்டும் கடலில் விடும் போது சந்தோஷமாக உள்ளது’’ என்றார்.

அதிகாரிகள் கூறியது, ‘‘கடல் ஆமைகள் நீண்ட வருடம் வாழக் கூடியது. பெரும்பாலும் கப்பல் மற்றும் படகுகளில் மோதுவதாலும் மீனவர் விரித்த வலையில் சிக்குவதால் இறக்கிறது. அதனால் கடல் ஆமையின் பயன்கள் குறித்து மீனவர்களிடம் அவ்வப்போது கூட்டம் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன் பயனாக தற்போது அதிகமான ஆமைகள் உயிருடன் கடலில் விடப்பட்டுள்ளது’’ என்றனர்.