சிவகங்கை, ஆக.8: தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக வரும் கணக்கெடுப்பு அலுவலர்களிடம் பொது மக்கள் தேவையான தகவல்களை அளித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் 1.8.2026 முதல் தொடங்கி 30.8.2026 வரை நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 9 வருவாய் வட்டங்களுக்குட்பட்ட ஊரகப்பகுதிகள், 9 ஊராட்சிப் பகுதிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகள் என மொத்தம் 21 பொறுப்பு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தாசில்தார்கள், செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2025 வீட்டுத் தொகுப்புப் பட்டியல்களாக பிரிக்கப்பட்டு இப்பணி நடைபெறுகிறது. இப்பணியை மேற்கொள்ள களப்பணியாளர்களாக 1880 கணக்கெடுப்பு அலுவலர்களும், 304 மேற்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17.7.2026 முதல் 31.7.2026 வரை சுயவிபரப் பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட காலத்தில் சுய விபரப்பதிவுகள் மேற்கொண்ட பொதுமக்கள் தங்களால் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டு பெறப்பட்டுள்ள ஐடியை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் அளிக்க வேண்டும்.



