திருவாடானை, செப்.7: திருவாடானை அருகே சீந்திவயல் மற்றும் கீழக்கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குஞ்சங்குளம் ஊராட்சி சார்பில் வெளியங்குடி கண்மாய் பகுதியின் அருகில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்தப் போர்வெல் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதிக்கு ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகம் செய்ய முடியாத சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் போர்வெல்லை பழுது நீக்கி அப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


