மண்டபம், ஆக.7: வேதாளை மீனவர் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் அருகே வேதாளை ஊராட்சியில் தென் கடலோரப் பகுதியில் சூடைவலைகுச்சு, சிங்கி வலைகுச்சு என இரண்டு மீனவர்கள் வசிக்க கூடிய கிராம பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் அரசு பொது விநியோக கடைகளில் பொருள்கள் வாங்க புதிதாக சூடைவலை குச்சு பகுதியில் அரசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பொருள்களை ரேஷன் கடை அலுவலர்கள் மீன்பிடி வலைகள் பிண்ணும் கூடாரத்தில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் மீதம் உள்ள பொருள்கள் பாதுகாப்பற்ற நிலையில் தேவையில்லாமல் வீணாகிப்போகிறது. ஆதலால் புதிதாக ரேஷன் கடைக்கு கட்டப்பட்ட புதிய கடையை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




