வாலிநோக்கத்தில் சிறப்பாக செயல்படும் அரசு உப்பு நிறுவனத்தில் மருத்துவமனை அமைக்கலாம் தொழிலாளர்கள் கோரிக்கை
சாயல்குடி, மே 7: வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு தொழிலாளர் மருத்துவமணை அமைக்கப்பட வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலாடி ஒன்றியம், வாலிநோக்கத்தில் மாரியூர் - வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. 1974ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் அயோடின் கலந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1,350 ஒப்பந்த பணியாளர்களும், சுமார் 500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.
உப்பளம் அமைக்க நிலத்தை சீர்படுத்துதல், பாத்தி கட்டுதல், கடல்நீர் பாய்ச்சுதல். உப்பை விளைவித்து, பிரித்தெடுத்து சேகரித்து சேமித்தல். விளைவித்த உப்பை சுத்திகரித்து தரம் பிரித்து பாக்கெட் போட்டு, சந்தைக்கு அனுப்பும் வரையிலான பணிகளில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே
2017 முதல் இரட்டை சுழற்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக நாள்தோறும் சுமார் 5 டன் வரை சுத்திகரிக்கப்பட்ட உப்பு உற்பத்தி செய்யும் வசதிகள் உள்ளது. இதனால் இந்நிறுவனம் மாதத்திற்கு ரூ.25 லட்சம் லாபம் ஈட்டி வருகிறது. லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தில், வேலை பார்த்து வரும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடுமையான வேலைகள் இருப்பதால் கை, கால், இடுப்பு போன்ற உடல் வலிகள், பார்வை குறைபாடு, சுவாச பிரச்னை உள்ளிட்ட உடல் உபாதைகளால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இதனால் விடுமுறை எடுக்கும் நிலையால் சம்பளம் இன்றி குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது. மேலும் உடல்வலியை போக்கிக்கொண்டு பணிக்கு வருவதற்காக அதற்கான மாத்திரைகள், நிவாரணிகளை மருந்துக்கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்கவிளைவுகள், துணை நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
உடல் பரிசோதனைகள் செய்யாமல் மாத்திரை, மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவதால் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதுபோன்ற உடல் உபாதைகளால் வயதான காலத்தில் இவர்கள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. உப்பு நிறுவனத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. ஆனால் அங்கு முறையாக மருத்துவர் பணியில் இல்லாததால் பரிசோதனை உள்ளிட்ட வசதிகள், போதிய மருந்து, மாத்திரைகள் கிடைப்பதில்லை.
எனவே தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உப்பு நிறுவனத்திற்கென பிரத்யேகமாக ஒரு மருத்துவர் தலைமையில் செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை நியமித்து, நிரந்தர தொழிலாளர் மருத்துவமனை அமைக்க வேண்டும். கண், மூக்கு, தொண்டை, எலும்பு, நுரையீரல் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைக்காக சிறப்பு மருத்துவர்களை கொண்டு 3 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உப்பள தொழிலாளர்கள் கூறியதாவது: கடும் வெயிலில் கடல் உப்பு காற்றில், உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளான, கையுறை, கண்ணாடி, முகமூடி, பாதுகாப்பு உடைகள் போன்றவை வழங்கப்படவில்லை. உப்பளத்தில் நிழற்கூடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக கிடையாது. இத்தகைய சூழலில் வேலை பார்த்து வரும் நாங்கள் உடல் வலி உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறோம். வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து ஒரு செவிலியர் உப்பு நிறுவன பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் போதிய மருந்து, மாத்திரைகள் அவரிடம் கிடையாது, பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்க மருத்துவர் கிடையாது. இதனால் தனியார் மருந்துக்கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். உடல்நலக்குறைவு ஏற்பட்டு 0விடுமுறை எடுக்கும் பட்சத்தில், வருமானம் இன்றி எங்கள் குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்படும் நிலையும் இருக்கிறது. எனவே தேவையான மருத்துவ உபகரணங்களுடன் ஒரு நிரந்தர மருத்துவர், நர்ஸ் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுடன், வாலிநோக்கம் உப்பளம் பகுதியில் மினி கிளினிக் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினர்.



