Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருஉத்தரகோசமங்கையில் கோவிந்தப் பெருமாள் கோயில் தலுகை விழா

ராமநாதபுரம், மே 7: திருஉத்தரகோசமங்கை கோவிந்தப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தலுகை விழாவில், பனை ஓலையில் சாதமிட்டு மண்வெட்டியால் கிளறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா நடைபெற்றுவருகிறது. இதையொட்டி கண்மாய் கரையோரம் உள்ள பழமையான கோவிந்த பெருமாள் கோயிலில் மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மதுரையின் சித்திரைத் திருவிழாவிற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள கோவிந்த பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா துவங்குவது வழக்கம். இதையொட்டி முத்து திரித்தல் நிகழ்வில், கடந்தாண்டு அறுவடை செய்த விதைப்பு நெல் உள்ளிட்ட தானியங்கள் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டது. பின்னர் மதுரை சென்ற பொதுமக்கள், கள்ளழகரை தரிசித்துவிட்டு சொந்த ஊர் திரும்பினர். மதுரையில் அழகர் வைகையில் இறங்கியபின், பல்வேறு மண்டகப்படிளில் எழுந்தருளி, மீண்டும் அழகர்கோவில் சென்றடைந்த பிறகு, இங்குள்ள கோயிலில் தலுகை எனப்படும் அன்னதான விழா நடப்பது வழக்கம்.

அதன்படி திரி எடுத்தலின் போது கிடைத்த நெல்லை அவித்து அரிசியாக்கி, நேற்று இரவு கிராம மக்கள் ஒன்று கூடி அன்னதானம் தயார் செய்தனர். இதற்காக வடித்த சாதம் பனை ஓலையின் மீது கொட்டப்பட்டது. முன்னதாக மூலவர் கோவிந்தபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடத்தி, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு வடமாலை சாற்றப்பட்டது. இதையடுத்து கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட மண்வெட்டியின் உதவியுடன் பனை ஓடையில் கொட்டிய சாதம் கிளறப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘மதுரை சித்திரை திருவிழாவிற்காக முத்து திரித்தல் 140 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக நடக்கிறது. அப்போது கிடைக்கும் தானியங்கள், காய்கறிகளை பொதுசமையலாக செய்து, பல நூற்றாண்டுகளாக அன்னதான விழாவை பாராம்பரிய முறைப்படி நடத்தி வருகிறோம். வயலில் சேற்றை கிளற பயன்படும் மண்வெட்டியால் சோற்றை கிளறி விவசாயத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த வழிபாடுகளை நடத்துகிறோம்’ என்றனர்.