Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வறட்சியை தாங்கி வளர விதை நேர்த்தி செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜூலை 6: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விதைகளை விதைக்கும் முன் எளிய ரசாயனக் கலவைகளில் விதை நேர்த்தி செய்தால் வறட்சியினை தாங்கி அதிக விளைச்சல் ஏற்படும் என வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை வேளாண் துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, வறட்சி காலங்களில் தாவரத்தின் இலையில் உள்ள புரோட்டாபிளாசம் காய்ந்து விடுவதால் பயிரும் காய்ந்து விடுகின்றது. எளிய ரசாயனக் கலவைகளில் விதை நேர்த்தி செய்வதன் மூலம், விதை கடினப்படுத்தும் பொழுது புரோட்டோபிளாசம் காயாதவாறு பார்த்துக் கொள்வதால் செடி வாடாமல் இருக்கும்.

மானாவாரி சாகுபடியில் விதை கடினப்படுத்தி விதைப்பதால் விதைகளின் உயிர்த்தன்மை காக்கப்பட்டு, முளைப்புத் திறன் தன்மை அதிகரித்து, பயிர்களின் எணணிக்கை பராமரிக்கப்படுகிறது. வேர் மற்றும் தண்டு பாகங்கள் வீரியத்துடன் வளர்ந்து, வேர் வளர்ச்சி அதிகமாவதால் பயிருக்கு வறட்சியைத் தாங்கி வளரும் சக்தி கிடைக்கிறது. அதிகவேர் வளர்ச்சியினால் மண்ணிலிருந்து அதிக சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொண்டு சரியான பயிர் எண்ணிக்கை இருப்பதாலும், பயிர் வீரியமாக வளர்வதாலும் அதிக மகசூல் கிடைக்கிறது.

இது குறைந்த செலவிலான பயிர் சாகுபடி நுணுக்கமாவதால் விவசாயிகளுக்கு வருமானம் அதிக அளவில் கிடைக்கிறது. நேரடியாக விதைக்கப்படும் நெல் விதைக்கு 10 கிராம் பொட்டாஷ் உரம் 1லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கரைத்த கரைசலில் விதைகளை 8 முதல் 20மணி நேரம் வரை ஊற வைக்கவேண்டும். அதன்பின் தண்ணீரை வடித்து சாக்கில் அல்லது தார்ப்பாயில் விதைகளை நன்றாகப் பரப்பி நிழலில் காய வைத்து பின்பு விதைக்க வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைக்கு 250கிராம் பொட்டாஷ் உரம் தேவைப்படும். மேற்கண்ட எளிய மானாவாரி தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.