தொண்டி, செப்.5: தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் கோரிக்கையை ஏற்று, ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவின்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தொண்டி நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தொண்டி 14வது வார்டு கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார். ஜென்னதுல் பிர்தவுஸ் வரவேற்றார்.தமுமுக சாதிக்பாட்சா, தெற்குத் தெரு ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, சமூக ஆர்வலர் ஜான்முகம்மது, 15வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி, பரக்கத் அலி, அன்சாரி, ஹம்மாது நவ்பிக், செரிபா, ஆலிமா நாச்சியா மற்றும் ஆலிமா செய்யது சுல்த்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக நல அலுவலர் மெர்சி, ஊர் நல அலுவலர் சசி ஆகியோர் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. இதில் தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் என சுமார் 270க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நலவாரியப் பதிவுகளை மேற்கொண்டனர்.

