பரமக்குடி, நவ. 3: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கீழப்பார்த்திபனூர் பகுதியில் பட்டீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. கி.பி.13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயில், வரலாற்றுச் சிறப்பும் பழமையும் வாய்ந்ததாகும். கோயிலில் பல்வேறு கலைநயமிக்க சிற்ப வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இங்கு பட்டீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இக்கோயில் முறையாகப் பராமரிக்கப்படாததால், கோயிலைச் சுற்றிலும் சுமார் 6 அடி உயரத்துக்கு மண் குவிந்து, கோயிலின் பெரும்பகுதி மண்ணுக்குள் புதைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பழமையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இக்கோயிலிலும் திருப்பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, மாநில அளவிலான திருப்பணிகள் ஆலோசனைக் குழுவின் உத்தரவின்படி, கோயில் சுவரின் அருகே பள்ளம் தோண்டி அதன் அடிப்பகுதி கண்டறியப்பட்டது. இதற்காக சுமார் 8 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பின்னர் திருப்பணிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் மண் குவிந்து, கோயில் சுவர்களையும் மூடியுள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, மண்ணுக்குள் புதைந்துள்ள பட்டீஸ்வரர் கோயிலை முழுமையாக மீட்டெடுத்து, தேவையான திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


