ராமநாதபுரம், நவ. 3: திருடு போன நகைகளை போலீசார் மீட்டும் ஒப்படைக்காமல் ஏமாற்றிவிட்டதாக போலீஸாரை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உடையநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, நான் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறேன். எனது வீட்டில் 2017ம் ஆண்டு 23 பவுன் நகைகள் திருடுபோனது.
இதுகுறித்து அபிராமம் போலீஸார், 13 பவுன் நகைகைள் மட்டும் திருடுபோனதாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நகை திருடனை நானே பிடித்து போலீஸில் ஒப்படைத்தேன். போலீஸார் அவரிடம் இருந்து அனைத்து நகைகளையும் மீட்டனர். ஆனால் என்னிடம் நகைகளை ஒப்படைக்கவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதன்பின் 2018-ம் ஆண்டு தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தேன். இவ்வழக்கில் 2025-ம் ஆண்டு 6 மாதத்தில் என்னிடம் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு ஆண்டாகியும் போலீஸார் மனித உரிமை ஆணைய உத்தரவை மதிக்கவில்லை என்றார்.
அதனையடுத்து ராமநாதபுரம் தாசில்தார் பழனிக்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்த கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் அழைத்துச் சென்றார். கலெக்டர் எஸ்.பி மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனையடுத்து போராட்டதை கைவிட்டு ஊருக்கு சென்றனர்.


