ராமநாதபுரம், ஆக.3: முதுகுளத்துார் அருகே ஏனாதி பூங்குளம் அய்யனார் கோயிலில் நேற்று ஆப்பநாடு மறவர் சங்கக் கூட்டம நடந்தது. இதில் கடந்தாண்டு வரவு-செலவு கணக்கு பார்க்கப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக கிடாத்திருக்கை வழக்கறிஞர் சண்முகபாண்டியன், செயலாளராக ஏனாதி வழக்கறிஞர் குணசேகரன், பொருளாளராக முன்னாள் ராணுவவீரர் மாங்குடி முத்துராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் முதுகுளத்தூரில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக கூட்டத்தில் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
அதன்படி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மறவர்களுக்கு டிஎன்டி ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் மறவர் சிறப்பு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ராணுவத்தில் பயன்பாட்டில் இருந்த மறவர் ரெஜ்ஜிமென்ட் இட ஒதுக்கீடு மீண்டும் செயல்படுத்த வேண்டும். சீர் மரபினருக்கு அரசு வழங்கக்கூடிய கல்வி, வேலை வாய்ப்பு, சுய தொழில், வங்கி கடனுதவி, அரசு நலத்திட்டங்கள் பெயரளவில் இருப்பதை முழுவீச்சில் நடைமுறைபடுத்த வேண்டும். மறவர் பள்ளிகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். முத்துராமலிங்கத்தேவர் பெயரில் பல்கலைகழகம் அமைக்க வேண்டும்.
வைகை தண்ணீரை கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகா பாசன வசதிக்காக புதிய ஆயக்கட்டுதாரர்களாக சேர்த்து பாசன வசதியை பெருக்கி ஒரு போகம் விவசாயத்தை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் இயற்றப்பட்டது.




