ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ வசதி தேடி இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தேடி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தனி தாலுகாவாகவே செயல்பட்டு வருகின்றது. ஆகையால் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்திடவும், கூடுதல் மருத்துவ வசதிகளையும் செய்து தந்து இப்பகுதி பொதுமக்களின் நலனை காக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், ஆர்.எஸ்.மங்கலம் தனித்தாலுகாவாக சுமார் கடந்த 6ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தை மட்டும் இதுவரை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.இவ்வூரைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக இங்கு தான் வருகின்றனர். சுற்றுவட்டார கிராம மக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ வசதி இங்கு கிடைக்காததால் திடீர் மரணத்தை தழுவுகின்ற நிலை ஏற்ப்பட்டு விடுகிறது.
மேலும் இங்கு எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகளும் இல்லை. மேலும் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வரும் நோயாளிகள் இங்கிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரம் உள்ள ராமநாதபுரம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அரசு இப்பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த திமுக ஆட்சியில் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக கூடுதல் கட்டிட வசதி செய்து கொடுத்துள்ளது மகிழ்சியாக உள்ளது. அதேபோல் தற்போதைய அரசு இம்மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ வசதிகளுடன், கூடுதலான மருத்துவர்களை நியமித்து மருத்துவமனையை தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனையாக செயல்படுத்திட அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவிட முன் வரவேண்டும் என்றனர்.


