Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரிசி, எண்ணெய் விலை உயர்வால்; செட்டிநாடு பலகாரம் 15 சதவீதம் விலை உயர்வு

காரைக்குடி: காரைக்குடி, கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை தொழிலாக செட்டிநாட்டு பலகாரங்கள் தயார் செய்து வருகின்றனர். திருமணங்கள், வீட்டு விசேஷங்களுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுப்பவர்களுக்கு பலகாரம் செய்யப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகைகளுக்கு பலகாரங்கள் செய்யப்பட்டு மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பலகாரங்களுக்கு தேவையான பொருட்கள் கை பக்குவமாக தயார் செய்வதாலும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மறு முறை பயன்படுத்துவது கிடையாது. இதனால் ருசி அதிகம், பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாது. இங்கு தேன்குழல் (முறுக்கு), கைமுறுக்கு, பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, சீப்பு சீடை, மகிழம்பு முறுக்கு, மணகோலம் (இனிப்பு), அதிரசம், கைச்சுற்று முறுக்கு 4 முதல் 9 சுற்றுவரை உள்பட 50 வகையான பலகாரங்கள் தயார் செய்யப்படுகிறன.

தவிர முள்ளுமுறுக்கு, பிரண்டை முறுக்கு, கைமுறுக்கு, லட்டு, மைசூர் பாகு, ஓலை பக்கோடா போன்ற பலகாரங்களும் தயார் செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு ஆர்டர்கள் வரும் நிலையில் பலகாரங்களுக்கு மிக முக்கிய மூலப்பொருட்களாக அரிசி, எண்ணெய், பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கடுமையாக உயர்ந்துள்ளதால் செட்டிநாடு பலகாரங்களும் 15 முதல் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் செட்டிநாடு பலகாரங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு என ஆர்டர்கள் அதிகளவில் வரும். பருப்பு, எண்ணெய் வகைகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பலகாரங்களின் விலை கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பலகாரங்களின் விற்பனை சற்று மந்தமாக உள்ளது. அதிகளவில் வாங்கியவர்கள் தற்போது குறைவாக வாங்கி செல்கின்றனர். தீபாவளிக்கு அன்பளிப்பு கொடுக்க வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது’’ என்றனர்.

பலகாரங்கள் விலையில் முறுக்கு (ஒரு பீஸ்) ரூ.12, அதிரசம் ரூ.12, மாவு உருண்டை ஒன்று ரூ.12, 4 சுற்று கை முறுக்கு ஒன்று ரூ.22, டயர் முறுக்கு ஒன்று ரூ.12, காரமுறுக்கு 200 கிராம் ரூ.110, சீப்பு சீடை 200 கிராம் ரூ.160, சின்ன சீடை 200 கிராம் ரூ.220, மண கோலம் 200 கிராம் ரூ. 120, தட்டை 200 கிராம் ரூ.110, இனிப்பு சீடை 200 கிராம் ரூ.110, உளுந்து மாவு உருண்டை ஒரு பீஸ் ரூ.12, பட்டர் முறுக்கு 200 கிராம் ரூ.110 என விற்பனை செய்யப்படுகிறது.