சிவகங்கை, அக். 2: தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை எளிமைப்படுத்தும் விதமாக, இ-சேவை மையத்தின் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற அரசு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது


