திருப்பூர், அக்.7: திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை இடியுடன் கூடிய மழை பெய்து தொடங்கியது. நள்ளிரவு வரை நீடித்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
பலவஞ்சிபாளையம் ஜெயலலிதா நகர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து நின்றதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இதேபோல், பல்வேறு சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். திருப்பூர் மாவட்டத்தில் 193.20 மி.மீ மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக திருப்பூர் தெற்கு பகுதியில் 48 மி.மீ, வடக்கு பகுதியில் 30மி.மீ, செவந்தாம்பாளையம் பகுதியில் 26 மி.மீ, அவிநாசியில் 13 மி.மீ, ஊத்துக்குளியில் 1.20 மி.மீ, பல்லடத்தில் 4 மி.மீ, தாராபுரம் உப்பாறு அணை பகுதியில் 25 மி.மீ, காங்கயத்தில் 9 மி.மீ, உடுமலைப்பேட்டை அமராவதி அணைப்பகுதியில் 20 மி.மீ, மடத்துக்குளத்தில் 3 மி.மீ என சராசரியாக 9.66 மி.மீ பதிவாகியுள்ளது.


