பொன்னமராவதி, ஆக.8: பொன்னமராவதி அருகே கண்மாய் குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடந்த இரண்டு வருடங்கலாகவே சாரல் மழையாகவே பெய்து விட்டு சென்றது. இந்த மழையினால் கண்மாய், குளங்கள் நிரம்பவில்லை. இப்போது கடும் வெயில் வாட்டி வருவதால் திருக்களம்பூர்வார்பட்டு, ஏனாதி, மைலாப்பூர் ஆலவயல், நகரப்பட்டி, மரவாமதுரை, ஒலியமங்களம், மேலத்தானியம், சேரனூர் காரையூர், அரசமலை, செம்பூதி, கொன்னைப்பட்டி, வேகுப்பட்டி, காட்டுப்பட்டி, உசிலம்பட்டி, தூத்தூர் கண்டியாநத்தம், செவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள் தண்ணீர் இன்றி வெறுச்சோடிக்கிடக்கின்றது.
கண்மாய்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் நிலை தான் உள்ளது. கிணற்று பாசனத்தில் விவசாயம் செய்த விவசாயிகள் இப்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். போர்வெல் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு சாகுபடி செய்த விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தென்னை, மா, பலா போன்ற மரவகைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை வரும் என எதிர்பார்த்த விவசாயிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.



