Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சப்பை விருதுகளுக்கு பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள்,வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பாக விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும், விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் 15.01.2026 க்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.