அறந்தாங்கி, ஆக. 29: அறந்தாங்கி அடுத்த கட்டுமாவடியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சீரமைத்து கொடுத்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் ஊர் தலைவர்களும், பொதுமக்களும், பாராட்டுகள் தெரிவித்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி சுற்று வட்டார கிராமங்களில் 2,000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கட்டுமாவடியில் மீனவர் தெரு இராமர் கோவில் அருகில் சுடுகாடு உள்ளது.
இந்த சுடுகாடு கட்டுமாவடி, கணேசபுரம், செம்பியன் மகாதேவி பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டில் ஒரு பகுதியில் உள்ள பாதை ஆற்றுப்பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களிலும், கடலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுதும் தண்ணீரிலும், சேற்றிலும் இறங்கி சிரமத்துடன் இறந்து போன உடல்களை எடுத்து செல்லும் நிலை இருந்து வந்தது.
இந்த சுடுகாடு பாதயை சீரமைக்க வேண்டும் என கட்டுமாவடி, கணேசபுரம், செம்பியன் மகாதேவிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் பணம் வசூல் செய்து பொக்லைன் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி, சிறிய அளவிலான சிமெண்ட் உருளை பாலம் அமைத்து, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் மூன்று ஊர் தலைவர்கள் தலைமையில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த பணிக்கு மூன்று ஊர் தலைவர்களும், பொதுமக்களும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.



