புதுக்கோட்டை, ஆக. 26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ அரசுப்போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று புதுக்கோட்டையில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியூ அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மண்டலத்தலைவர் கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா, உள்ளிட்டோர் பேசினர்.
போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும். வாரிசு வேலைக்கு பதிவு செய்துள்ள அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரமான உதிரிப் பாகங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் போது முழக்கங்களாக எழுப்பப்பட்டன.



